Header Ads Widget

Responsive Advertisement

அந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்



இனிய இளைஞனே
துளிர்விடும் தளிரே
உனக்குள் இருக்கும்
உள்ளாற்றலை உற்றுப்பார்க்க
ஜெபத்தோட்டத்திற்குள்ளே
உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே
உன்னை நீ அறிந்தால்
உன் வழியை வாய்க்கப்பண்ணி
யோசுவாவைப் போலாகிவிடலாம்


இந்திய மண்ணில் முளைத்த இளைஞனே
ஆதியாகமத்திற்குள் நுழைந்து
37-ல் ஓர் அழகிய 17-ஐ இனம் கண்டுவிடு
அவனைப் போலாகிவிடு
போதையில் சிக்கி பாதை மாறி
முப்பதில் முடங்கிவிடும் இக்கால இளைய
சமுதாயத்தில்
முப்பதில் அந்த இளைஞனைப் போல முழுமை
பெற்றுவிடு
சிறையிலிருந்தாலும் சிங்காசனத்தில் ஏறிவிடலாம்


துணிவுடன் தூய மனதுடன்
துன்மார்க்கத்தை எறிந்துவிடு
உண்மையுடன் நல்மனச்சாட்சியுடன்
தீமோத்தேயுவைப் போல உத்தமக்
கூட்டாளியாகிவிடு
எங்கிருந்தாலும் அங்கிருக்கும் பவுலைப்
போன்றோருக்கு
உடன் பங்காளியாகிவிடலாம்


வில்லுகளையும் அழகிய செல்-லுகளையும்
வசைச் சொல்லுகளையும்
அம்புகளையும் வீண் வம்புகளையும்
அசட்டை செய்துவிடு
அந்நிய நாடானாலும் அந்த இளைஞனைப் போல
கண்ணியத்தைக் காட்டிவிடு


சோதனைகள் சிலரைப் பதுக்கலாம்
சிலரைச் செதுக்கலாம்
சோதனைகள் கூட்டணி அமைத்து அந்த
இளைஞனை செதுக்கியது
உன்னையும் செதுக்க ஒப்புக்கொடுத்தால்
உரிய காலத்தில் உயர்வடையலாம்

நீரூற்றண்டையிலே நிற்பவனே
அந்த இளைஞனைப்போல
கனிதரும் செடியாகிவிடு
சுவரென்றும் பாராமல் கொடிகளைப் படரவிடு
வில்வீரர் மனமடிவாக்கினாலும் கவலையைவிடு
விசுவாச வீரனாய் செடியைக் கொடியாக்கி
பகைவர் என்றும் பாராமல் படரவிடு


உனக்குள் உறைந்துகிடக்கும்
உள்ளாற்றலை உசுப்பிவிடு
யாக்கோபின் வல்லவரால்
உன் ஆற்றல் கூடங்குளம் அனுஉலையாகட்டும்
உலகத்தை ஒளிமயமாக்கட்டும்

நான் ஏன் பிறந்தேன் என்றோ
நான் எதற்காக இங்கு வந்தேன் என்றோ பேசாதே


உன் சிரசை சிங்காரமாக்க
உண்மையுள்ள உன் உச்சந்தலையை
அலங்கரிக்க
உனக்குள்ளிருக்கும் உளளாற்றலை
பேராற்றலாக்க
இதோ ஜெபத்தோட்டத்திற்குள்ளே
கொண்டுவந்திருக்கிறேன்
இங்கே சர்வவல்லவரோடு பழகி
சமாதானமாகிவிடு
விசுவாசத்தில் வல்லவனாகிவிடு


வாலிபத்தின் வாசலில் நிற்பவனே
உன்னை வாழ்த்துகிறேன்.


‍‍- பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்... மதுரை

Post a Comment

0 Comments