Header Ads Widget

Responsive Advertisement

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6

எபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ரோமப் பேரரசுக்கு தலைநகராகவும் இருந்தது, அங்கேதான் அப்போஸ்தலனாகிய பவுல் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து கிரேக்கர்களுக்கும் யூதர்களுக்கும் நற்செய்தி அறிவித்தார். ஆசியாவிலுள்ள ஏழு சபைகளும், எபேசு பட்டினத்திலிருந்து பவுல் செய்த ஊழியத்தில் உண்டாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

எபேசு பட்டனத்தின் முக்கிய கடவுள் "தியானாள்" ஆகும் இதன் கிரேக்கப் பெயர் "ஆர்டிமிஸ்" என்பதாகும், இது இனப்பெருக்கத்தின் கடவுள் என்று அழைக்கப்பட்டது, தியானாளின் சிலை உடல் முழுக்க மார்பகங்களினால் நிறைந்திருந்தது. இந்தக் கோவில் அக்காலத்தில் 7 அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. இந்த தியானாள் கோவிலின் தூண்கள் ஒவ்வொன்றும் 60 அடி உயரமும், 127 தூண்களையும் கொண்டதாக அமைந்திருந்தது. அங்கு விபச்சாரிகள் அதிகமாக இருந்தனர், அங்கே தான் பவுல் ஊழியம் செய்து அனேக மந்திரவாதிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு தங்கள் மந்திரப் புத்தகங்களை எரித்ததாக பைபிளின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சொல்லுகிறது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

யோவான் என்றால் "யகோவாவின் ஈவு" என்று பொருள், அப்போஸ்தலனாகிய யோவானுக்கு மீன்பிடித்தல் தொழிலாக இருந்தது, கிறிஸ்து பரமேரின பின்பு இயேசுவின் தாய் இவரது பராமரிப்பில் இருந்து வந்தார், பிற்காலங்களில் இவர் எபேசு பட்டனத்துக்கு இடம்பெயர்ந்து ஆசியப்பகுதிகளில் இருந்த ஏழு சபைகளுக்கு கண்கானியாக இருந்தார் என்று நம்பப்படுகின்றது, "அன்பின் அப்போஸ்தலன்" என்று அழைக்கப்பட்ட இவரே அப்போஸ்தலர்களில் மிகவும் சிறியவர். ஆரம்ப நாட்களில் இவர் கோபப்படுகின்றவராகவும், அவசரப்படுகின்றவராகவும் இருந்தார்.(லூக் 9:49‍-56)

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

கி.பி90 காலகட்டங்களில் டொமிஷியன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான், இவன் யூதர்களிடத்திலும், கிறிஸ்தவர்களிடத்திலும் தேர்தல்வரி(POLL TAX) வசூலித்து ரோமானிய கடவுளின் கோவில்களைப் பராமரித்து வந்தான். இவனுடைய காலத்தில் தான் அப்போஸ்தலனாகிய யொவான் பத்மு என்ற தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். இதற்கு முன்பாக ரோம அரசாங்கத்தால் அப்போஸ்தலனாகிய யோவான் கொதிக்கின்ற எண்ணெய்க் கொப்பரையில் போட்டும் வேகாமல் உயிரோடு தப்பினார் என்று பாரம்பரியம் சொல்லுகின்றது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

பத்மு தீவு மத்திய தரைக்கடலில் துருக்கி (ஆசியா மைனர்) தென்மேற்கு கடற்கரையிலிருந்து 35 மைல் தொலைவில் உள்ளது இத்தீவு 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் கொண்ட சிறு தீவாகும், இத்தீவில் எரிமலைக் குன்றுகளும் புதர்களும் நிறைந்து காணப்படுகின்றது, இத்தீவு தற்போது கிரீஸ் நாட்டுக்கு சொந்தமாக இருக்கின்றது. இத்தீவிலிருந்தே அப்போஸ்தலனாகிய யோவான் நமது வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விஷேசத்தை தரிசனமாகக் கண்டு எழுதினார். இன்றும் அங்குள்ள உயரமான மலையில் யோவான் மடம் உள்ளது, அருகில் உள்ள குகையிலிருந்துதான் யோவான் தரிசனம் பார்த்ததாக கத்தோலிக்க மதத்தார் சொல்லுகின்றார்கள்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

பத்மு தீவில் யோவான் மரிக்கவில்லை, மாறாக  கி.பி 95 ல் பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட அவர் 18 மாதங்கள் கழித்து "நெர்வா" என்ற மன்னனின் ஆட்சியில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பின்பு இயற்கையான முறையில் மரணமடைந்தார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

எருசலேமில் மிகச் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சபை அக்காலங்களில் ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதும் பரவியிருந்தது, அதன் அங்கத்தினர்கள் பல இலட்சங்கள் இருந்தனர். கி.பி 112 ஆம் ஆண்டு "பிளினி" என்ற சரித்திர ஆசிரியர் "ட்ரஜன்" என்ற ராயனுக்கு எழுதிய புகழ் பெற்ற கடிதத்தில் "ஆசிய மைனரிலுள்ள எல்லா பிராந்தியங்களிலும், விக்கிரக வழிபாடு ஒழிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பெருந்திரளாகப் பெருகியுள்ளனர். இச் சபைகளில் எல்லா வகுப்பு மக்களும் அங்கத்தினராக இருக்கின்றனர். அடிமைகள் பிறரைப் போல சரிசமமாக நடத்தப்படுகின்றனர். சில இடங்களில் அடிமைகள் சபைத் தலைவர்களாகவும், உயர் வகுப்பினர் சபை அங்கத்தினராகவும் இருக்கின்றனர்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments